செய்திகள்

குள்ளஞ்சாவடி அருகே பெண் படுகொலை- கணவர் வெறிச்செயல்

Published On 2018-03-23 12:09 IST   |   Update On 2018-03-23 12:09:00 IST
குள்ளஞ்சாவடி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த கி.பாளையம் புது தெரு பகுதியை சேர்ந்தவர் தரணி சிங்(வயது42). கூலி தொழிலாளி

இவரது மனைவி சுமதி(வயது35). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஷோபனா(11), ஜெகதீஸ்வரி(9),என்ற 2 மகள்களும் சஞ்சய்(5) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தரணி சிங்குக்கு அவரது மனைவி சுமதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தரணி சிங்கும் அவரது மனைவி சுமதியும் கி.பாளையம் ஏரிக்கரை அருகே உள்ள வயல் பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றனர்.

அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது தரணிசிங் தனது மனைவி சுமதியை சரமாரியாக தாக்கினார். அங்கு வேலை செய்து கொண்டவர்கள் கணவன்- மனைவி இருவரையும் சமதானம் செய்தனர். அதன் பின்னர் வேலை முடிந்து மாலையில் தரணி சிங், சுமதி ஆகிய இருவரும் வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்த பின்னரும் ஆத்திரம் தணியாமல் இருந்த தரணி சிங் தனது மனைவி சுமதியை தாக்கினார். பின்னர் சுமதி கட்டி இருந்த சேலையால் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தரணி சிங்கை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News