செய்திகள்

கணவரை சந்திக்க வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்ட சிறை கண்காணிப்பாளர்

Published On 2018-03-20 11:00 GMT   |   Update On 2018-03-20 11:00 GMT
சிதம்பரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை சந்திக்க வந்த பெண்ணிடம் சிறை கண்காணிப்பாளர் லஞ்சம் கேட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்(வயது 26). இவருடைய மனைவி தமிழரசி(23). குடும்ப பிரச்சனை காரணமாக கோபாலகிருஷ்ணன் கத்தியால் தமிழரசியின் காலில் வெட்டினார்.

இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபாலகிருஷ்ணனை கைது செய்து சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் உள்ள தனது கணவரை பார்க்க தமிழரசி தனது 2 குழந்தைகளுடன் கிளை சிறைக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த சிறை கண்காணிப்பாளர் பூவராகமூர்த்தி தமிழரசியிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதையடுத்து தமிழரசி சிதம்பரம் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்று, மாஜிஸ்திரேட்டு பார்த்தீபனிடம் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு பார்த்தீபன், கிளை சிறை கண்காணிப்பாளர் பூவராகமூர்த்தியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரை மாஜிஸ்திரேட்டு எச்சரித்தார்.

மேலும் தமிழரசியின் புகார் குறித்து விசாரணை நடத்தி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். #Tamilnews
Tags:    

Similar News