செய்திகள்

ஆம்புலன்சில் சென்ற போது விபத்தில் சிக்கி விவசாயி பலி

Published On 2018-03-15 17:20 IST   |   Update On 2018-03-15 17:20:00 IST
தர்மபுரி மாவட்டம் பெருந்துறை அருகே எலும்பு முறிவுக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்ற விவசாயி விபத்தில் உயிரிழந்தார்.
பெருந்துறை:

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 39). விவசாயியான இவர் அந்த பகுதியில் தோட்டம் அமைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றை தூர் வாரும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் கால் மற்றும் கைகளில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

இந்த ஆம்புலன்ஸை தர்மபுரியை சேர்ந்த பழனிச்சாமி(39) என்பவர் ஓட்டிவந்தார். நேற்று மதியம் தர்மபுரியில் இருந்து புறப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் மாலை 4 மணியளவில் பெருந்துறையை அடுத்துள்ள சோளிபாளையம் பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற ஒரு கண்டைனர் லாரி திடீரென இடது புறம் சர்வீஸ் ரோட்டில் செல்வதற்காக லாரியை திரும்பிய போது அந்த லாரியின் பின்பகுதியில் ஆம்புலன்ஸ் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் ஆம்புலன்ஸ் வேனில் வந்த நோயாளி முருகேசன், அவரது மனைவி சரசு(32) உறவினர்கள் சந்திரன்(33) பழனி(42), ராஜசேகர்(35), சின்னத்தம்பி(55) மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிச்சாமி ஆகியோர் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்து போனார். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் சம்பவ இடத்திற்கு வந்து வேனை ஓட்டிவந்த திண்டுக்கல் மாவட்டம் கம்புளியம்பட்டியை சேர்ந்த முருகன்(40) என்ற டிரைவரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Similar News