செய்திகள்

கோபியில் எஸ்.எஸ்.எல்.சி. - பிளஸ் 1 மாணவர்கள் 5 பேர் மாயம்

Published On 2018-03-15 17:01 IST   |   Update On 2018-03-15 17:01:00 IST
தேர்வு எழுதப்போகும் நிலையில் கோபியை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் 2 பேர் உள்பட 5 மாணவர்கள் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:

தமிழகம் முழுவதும் நாளை (16-ந் தேதி) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது.

கோபியை சேர்ந்தவர்கள் சுபாஷ் (வயது 15), மவுனேஷ் (15). இவர்கள் 2 பேரும் கோபியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்கள்.

இதே பள்ளியில் கோபி பெருமாள்சாமிநகரை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் கோபிநாத் (16), சீத்தா லட்சுமிபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் முத்துராஜா (16), கரடிபாளையத்தை சேர்ந்த முத்து மகன் சவுந்தர் (16) ஆகியோர் பிளஸ்-1 படிக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்ததால் நண்பர்களானார்கள். வழக்கம்போல இவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர். மாலையில் பள்ளி முடிந்ததும் அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர்.

ஆனால் அவர்கள் 5 பேரும் வீட்டுக்கு செல்லவில்லை. இரவு நெருங்கிய பின்னரும் அவர்கள் வீடு வந்து சேராததால் அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் அவர்களை தேடி பார்த்தனர். உடன் படிக்கும் சில மாணவர்களிடமும் விசாரித்தனர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மாணவர்கள் சுபாஷ், மவுனேஷ், கோபிநாத், முத்து ராஜா, சவுந்தர் ஆகியோருடன் கோபி சீத்தா லட்சுமிபுரத்தை சேர்ந்த அஜீத் (18) என்ற வாலிபரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. நேற்று இரவும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வராததால் பதட்டம் அடைந்த பெற்றோர் கோபி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

மாணவர்கள் மாயமானது குறித்து அவர்கள் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மாயமான மாணவர்களை தேடி வருகிறார்கள்.

அவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது தேர்வுக்கு பயந்து ஓட்டம் பிடித்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஒரே நேரத்தில் 5 மாணவர்களும் மாயமான தகவல் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் மாயம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது மாயமான மாணவர்கள் ஈரோடு சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னை மாநகர போலீசாரிடம் கோபி போலீசார் பேசி தகவல் தெரிவித்து மாணவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News