செய்திகள்

அறந்தாங்கி அருகே கிராம உதவியாளர் மீது தாக்குதல்

Published On 2018-03-14 21:47 IST   |   Update On 2018-03-14 21:47:00 IST
அறந்தாங்கி அருகே கிராம உதவியாளர் மீது மதுபானம் விற்ற நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த பெருங்காடு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு வரை டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அந்த கடை மூடப்பட்டது. இந்தநிலையில் பெருங்காட்டில் சிலர் அரசு அனுமதி இல்லாமல் ஒரு குவார்ட்டர் ரூ.140 என்ற விலையில் டாஸ்மாக் மது பானங்களை விற்பனை செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு அறந்தாங்கி அருகே உள்ள மேனக்காட்டை சேர்ந்த, மேல்மங்கலம் வட்ட கிராம உதவியாளராக பணிபுரியும் செந்தில் என்பவர், அனுமதி இல்லாமல் மதுபானம் விற்ற நபரிடம் ஒரு குவார்ட்டர் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் ஒரு குவார்ட்டருக்கு ரூ.140 பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அனுமதி இல்லாமல் மது பானம் விற்ற நபர் அருகில் கிடந்த உருட்டு கட்டையால், செந்தில் தலையில் அடித்துள்ளார்.

இதில் செந்தில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செந்திலை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆவுடையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Similar News