செய்திகள்

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி அரசியல் கட்சியினர் மனு

Published On 2018-03-08 22:23 IST   |   Update On 2018-03-08 22:23:00 IST
பொன்னமராவதியில் எச்.ராஜாவை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை கைது செய்யக்கோரி மனுவும் அளிக்கப்பட்டது.
பொன்னமராவதி:

பெரியார் சிலை குறித்த கருத்துகளை தெரிவித்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய செயலாளர் பக்ருதீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் ஏனாதி ராசு மற்றும் விடுதலை சிறுத்தையினர், திராவிடர் கழகத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் விடுதலை இயக்கத்தின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- லெனிஸ்ட்) தமிழக செய்தி தொடர்பாளர் விடுதலை குமரன் தலைமையில், நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியுள்ள செயல் கண்டிக்கத்தக்கது. 

இந்நிலையில் சமீப காலங்களாக தமிழகத்தில் வன்முறை தூண்டும் வகையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதனை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இதனால் தமிழகத்தில் பிரச்சினை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

Similar News