செய்திகள்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் முத்தரையர் சங்கத்தினர் 150 பேர் கைது
புதுக்கோட்டையில் 10ம் வகுப்பு மாணவி அபர்ணா கொலை செய்யப்பட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 10ம் வகுப்பு மாணவி அபர்ணா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து கணேஸ் நகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை தமிழக போலீசார் முறையாக விசாரணை செய்யவில்லை என்றும் , சிபிசிஐடி, போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
ஆனால் அவர்களும் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பதால் வழக்கை சிபிஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சி.பி.ஐ.யாலும் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் அபர்ணா கொலை நடந்து 7 வருடங்கள் ஆன நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் முத்தரையர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 150 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews