செய்திகள்

சொத்து குவிப்பு புகார்: ராஜேந்திர பாலாஜி மீதான புகாரில் ஆதாரம் இல்லை - லஞ்ச ஒழிப்புத்துறை

Published On 2018-03-02 05:22 GMT   |   Update On 2018-03-02 05:59 GMT
அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார். #Rajendrabalaji #Vigilance

மதுரை:

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் ரூ. 74 லட்சம் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இதன் உண்மையான மதிப்பு ரூ. 6 கோடி ஆகும்.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் ரூ. 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், ரூ. 4.23 லட்சத்துக்கு 75 சென்டு நிலமும் வாங்கியுள்ளார். இந்த சொத்துக்களின் சந்தை மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகமாகும்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு கடந்த 2014-ல் விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருவதாக அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் மீதான விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோரிடம் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 23.5.2011 முதல் 20.4.2013 வரை பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த 2 புகார்கள் மீது முதற்கட்ட விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி 13.9.2013-ல் வழக்குப்பதிவு செய்தோம்.

இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி 54 ஆவணங்களை சேகரித்துள்ளார். 14 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். முடிவில் ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை.

இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. விசாரணையை தொடர வேண்டியதும் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்று அமைச்சருக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை கைவிட 4.2.2014-ல் பொதுத்துறை உத்தரவிட்டது. இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து விசாரணை ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு இயக்குநரும், விரிவான அறிக்கையை அரசும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.#Rajendrabalaji #Vigilance #tamilnews

Tags:    

Similar News