செய்திகள்

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் லைசென்சு ரத்து - போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

Published On 2018-02-20 14:06 IST   |   Update On 2018-02-20 14:06:00 IST
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது மீறினால் வாகனம் அனுமதி தடை மற்றும் ஓட்டுனர் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காஞ்சிபுர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த தாமல் பகுதியில் நேற்று முன்தினம் மினி வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்து குறித்து காஞ்சீபுரம் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை இணை ஆணையர் ராமலிங்கம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் ராமலிங்கம் கூறும்போது, “மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்லவதற்காக ஏற்படுத்தியுள்ள குறுக்கு வழிகளை தடை செய்யப்படும்.

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது மீறினால் வாகனம் அனுமதி தடை மற்றும் ஓட்டுனர் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

இந் நிலையில் தற்போது விபத்து நடந்த தாமல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும்படி அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சீபுரம் அடுத்த தாமல் பகுதியைச் சுற்றி பாலுசெட்டி சத்திரம், திருப்புட்குழி, முசரவாக்கம், கீழ்ஒட்டிவாக்கம் உள்ளிட்ட ஏராளமான மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் வயல்களும் சாலையின் மறுபுறம் விவசாயிகளின் நீராதரமான தாமல் ஏரியும் உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு பல முறை நீர்ப்பாசனத்திற்காக விவசாயிகள் சாலையைக் கடக்கும் நிலை காணப்படுகிறது.

மேலும் தொடக்க, நடுநிலைப் பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் ஆபத்தான நிலையில் நெடுஞ்சாலையைக் கடக்கும் நிலை உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக காஞ்சீபுரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புக் கூட்டத்தில் அப்போதைய தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் மற்றும் கிராம மக்கள் தாமல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை அத்திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் இருந்து ராஜகுளம் வரை உள்ள 15 கிலோ மீட்டர் பகுதியில் அதிக அளவில் வாகன விபத்துகள் நடப்பதாக மாவட்ட காவல் துறை சார்பினில் நடைபெற்ற ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே இப் பகுதி சாலையில் பல்வேறு இடங்களில் வாகனங்களின் அதி வேகத்தினை குறைக்கும் வகையினில் ரிப்ளக்கடருடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டது. ஆனாலும் வாகன ஓட்டிகள் அத்து மீறி சாலை விதிகளை மீறி செல்வதால் இது போன்று விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மேம்பாலம் அமைப்பது ஒன்றே விபத்துகளை தவிர்க்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Similar News