செய்திகள்

ஓ.எம்.ஆர். பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைக்கும் வடமாநில கொள்ளையர்கள்

Published On 2018-02-14 12:59 IST   |   Update On 2018-02-14 12:59:00 IST
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைக்கும் வடமாநில கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திருப்போரூர்:

சென்னை புறநகர் பகுதியான சிறுசேரி, நாவலூர், பொன்மார், மாம்பாக்கம், முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சியின் காரணமாக எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

பெரும்பாலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிபவர்கள் வெப்சைட் மூலம் இப்பகுதிகளில் இடம் தேர்வு செய்து அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கி பணத்தை முதலீடு செய்கின்றனர்.

சிலர் தங்களது வீடுகளை வாடகைக்கு விடுவதும், சிலர் எப்போதாவது தங்களது வீடுகளுக்கு வந்து தங்கியும் செல்கின்றனர். இதனால் இவர்களது வீடுகள் எப்போதும் பூட்டி இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்தக்காரர்கள் மூலம் ஆந்திரா, பீகார், ஒரிசா, ஜார்கன்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு கட்டுமானம் நடைபெறும் இடத்தின் அருகிலேயே ஷெட் அமைத்து கொடுக்கப்படுகிறது.

இதனால் கட்டிட பணிக்கு வரும் வடமாநிலத்தவர்கள் வேலை முடியும் வரை பல மாதங்களாக இங்கு தங்கி இருக்கிறார்கள். திடீரென அவர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் திரும்பவும் ஊருக்கு செல்ல, தங்களின் செலவிற்காக இங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.

இவ்வாறு இங்கு வந்து தங்கும் வடமாநிலத்தவர்களின் விவரங்கள் கூட சரியாக தெரியாத வண்ணமே உள்ளது. ஏதாவது கொள்ளை மற்றும் கொலை நடந்தால் மட்டும் விசாரிக்கும் போலீசார் மற்றபடி அவர்களை கண்டு கொள்வதில்லை.

இதனால் வடமாநில கொள்ளை கும்பல் இங்கு கைவரிசையை காட்டி விட்டு போலீசில் பிடிபடாமல் தங்களின் சொந்த ஊர்களுக்கு தப்பி சென்று விடுகிறார்கள். பின்னர் சிறிதுநாட்கள் தலைமறைவாக இருக்கும் அவர்கள் மீண்டும் சென்னை பகுதிக்கு வந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

இதேபோல் திருப்போரூரை அடுத்த பொன்மார் ஊராட்சிக்குட்பட்ட போலச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 7-ந்தேதி பூட்டியிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து வடமாநில கொள்ளை கும்பல் பொருட்களை அள்ளி சென்று விட்டனர். இந்த சம்பவம் தற்போது கண்காணிப்பு கேமராவால் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

கொள்ளை நடந்த வீடுகளின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அங்கிருந்து வந்து புகார் கொடுத்து இங்குவந்து தங்கி ஆகும் செலவைவிட கொள்ளைபோன பொருட் களின் மதிப்பு குறைவு என்பதால் அவர்கள் புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கண்காணிப்பு கேமரா காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் 5-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் செல்வது பதிவாகி இருக்கிறது. இதில் 2 பேர் ஜட்டி மட்டும் அணிந்து உடல் முழுவதும் எண்ணெய் பூசி தங்களின் கைகளில் ஆயுதங்கள் வைத்திருப்பதும் சிலர் முகத்தை மூடியும் உள்ளனர்.

கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறுவதும் அந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளையில் ஈடுபடும் வடமாநில கும்பல் கண்காணிப்பு கேமரா மற்றும் காவலாளி இல்லாத பூட்டி கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையே குறி வைத்து கைவரிசை காட்டி வருகிறார்கள்.

இதுபோன்ற சம்பவம் கிழக்கு கடற்கரை சாலை, மற்றும் ஓ.எம்.ஆர். பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.

எனவே காயார், தாழம்பூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட புறநகரில் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து தினமும் ரோந்துபணியில் ஈடுபடவேண்டும் எனவும் இங்கு வந்து தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் பெயர் முகவரிகள், அவர்கள் குற்றப்பின்னணி குறித்து போலீசார் விவரங்களை சேகரிக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News