புதுக்கோட்டை அருகே விபத்து- சென்னை சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
புதுக்கோட்டை:
சென்னை பல்லவாரம், தாம்பரம், பொழிச்சலூர், அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த உறவினர்கள் 15 பேர் நேற்று மாலை ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒரு வேனில் சுற்றுலா புறப்பட்டனர்.
வேனை குரோம்பேட்டை சஞ்சய்காந்தி நகரை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5.45 மணியளவில் அந்த வேன் புதுக் கோட்டை மாவட்டம் கட்டியா வயல்-காரைக்குடி சாலையில் அகரப்பட்டியை அடுத்த வெள்ளாற்றுப்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட் டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் வேனில் இருந்தவர்கள் கண்விழித்து அலறினர். அதற்குள் அந்த வேன் சாலையோர பள்ளத்தில் கலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் முன் இருக்கையில் அமர்ந்து வந்த பல்லாவரத்தை சேர்ந்த காமராஜ் (60) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் தங்களை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர்.
தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த கோகிலா பிரியா (18) மற்றும் பஞ்சவர்ணம் (70), கார்த்திக் (35), செல்வம் (45), பவித்ரன் (28), விஜயா (45), மாலா (45), சிவகாமி ஆகிய 7 பேரை மீட்டு ஆம்புலன்சு வேன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர்.
டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.