செய்திகள்

காட்டாங்கொளத்தூரில் தலையை துண்டித்து ரவுடி கொலை

Published On 2018-02-12 15:46 IST   |   Update On 2018-02-12 15:46:00 IST
காட்டாங்கொளத்தூரில் பிரபல ரவுடி தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:

காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் இன்று காலை வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு தனியாக கிடந்தது. அருகில் ரத்தக் கறை படித்த பாலிதீன் பை இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தலையை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் மறைமலைநகரை அடுத்த கோனாதி கிராமத்தைச் சேர்ந்த ராமதாசின் மகன் பாலாஜி (33) என்பது தெரிந்தது. அருகில் உடல் இல்லை. அதனை போலீசார் தேடி வந்தனர். ரவுடியான பாலாஜி மீது செங்கல்பட்டு, மறைமலை நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, நகை பறிப்பு வழக்குகள் உள்ளன.

நேற்று இரவு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்த பாலாஜியை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்கள். அதன்பின்னர் அவர் திரும்பவில்லை. இதனால் அவரை அழைத்து சென்ற நண்பர்களே கொடூரமாக கொலை செய்து இருக்கலாம் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

செங்கல்பட்டு நகரமன்ற துணைத்தலைவராக இருந்த ரவிபிரகாஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலாஜி குற்றவாளி. இந்த கொலைக்கு பழி வாங்க தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

பாலாஜி பிரபல ரவுடியான பட்டரவாக்கம் சிவாவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்து வந்துள்ளார். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? என்றும் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே ரவுடி பாலாஜியின் உடல் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் பகுதியில் புதரில் வீசப்பட்டு கிடந்தது. தலையில்லாத அந்த உடலை போலீசார் மீட்டனர்.

பாலாஜியை தலையை துண்டித்து உடலை வீசி சென்று இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகள் கும்பல் பிறந்த நாள் கொண்டாடி அட்டகாசம் செய்தனர்.

தற்போது ரவுடி ஒருவரை கொலை செய்து தலையை ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீசி சென்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News