செய்திகள்

ஆலந்தூரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு: முற்றுகை-மறியல்

Published On 2018-02-08 15:22 IST   |   Update On 2018-02-08 15:22:00 IST
ஆலந்தூர் எம்.என்.கே. சாலையில் சுரங்கப் பாதை முதல் காந்தி மார்க்கெட் வரை உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:

ஆலந்தூர் எம்.என்.கே. சாலையில் சுரங்கப் பாதை முதல் காந்தி மார்க்கெட் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

வாகனங்களில் செல்வோர் சிரமப்படுவதாகவும், ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தனர்.

இதையொட்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் கடைகளை அகற்ற வந்தனர். இதற்கு அங்குள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

ஜே.சி.பி. எந்திரம் முன்பு படுத்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தி.மு.க. பகுதி செயலாளர் குணாளன், பேரவை மாவட்ட தலைவர் சவுந்தர ராஜன், கணேசன் உள்பட ஏராளளான வியாபாரிகள் அங்கு வந்து அதிகாரிகளிடம் சமரச பேச்சு நடத்தினார்கள்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், “6 மாதத்துக்கு முன்பே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு கொடுத்தும் இடத்தை விட்டு நகர மறுக்கிறார்கள். சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கார், வேன், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நலன் கருதி ரோட்டை ஆக்கிரமிக்காதீர்கள்” என்று கூறினார்கள்.

அங்கு பதட்டமான நிலை நிலவுவதால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews

Similar News