செய்திகள்

சமோசா சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த 10-ம் வகுப்பு மாணவி மரணம்: பெற்றோர் அதிர்ச்சி

Published On 2018-02-08 15:05 IST   |   Update On 2018-02-08 15:05:00 IST
நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணியில் சமோசா சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த 10-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர்:

நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணி, கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (வயது 14). சின்ன நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை அவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு தோழிகளுடன் நடந்து வந்தார். வரும் வழியில் ஒரு கடையில் சமோசாவும், குளிர் பானமும் அவர்கள் வாங்கினர்.

பின்னர் சமோசாவை சாப்பிட்டு விட்டு குளிர் பானத்தை ஒரே நேரத்தில் குடிக்க போட்டி நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது காயத்ரி, சமோசாவை சாப்பிட்டு விட்டு குளிர்பானத்தை குடித்தார். இதில் திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்டு பயந்து போன தோழிகள் கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காயத்ரியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூச்சு திணறி காயத்ரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காயத்ரியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் தோழிகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews

Similar News