செய்திகள்

மதுராந்தகம் அருகே திருமண கோஷ்டியினர் மோதல்: வேன்-பஸ் கண்ணாடி உடைப்பு

Published On 2018-02-08 14:47 IST   |   Update On 2018-02-08 14:47:00 IST
மதுராந்தகம் அருகே திருமண கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வேன் மற்றும் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு அருகே உள்ள அரசூரை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் வேன், பஸ்சில் புதுச்சேரியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அரசூர், ஆரவல்லிநகர் அருகே வந்தபோது பஸ்சில் இருந்தவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் பஸ்சை நிறுத்தி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

சத்தம் கேட்டு வேனில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்களுக்கும் அடி விழுந்தது.

மேலும் பஸ்-வேனின் கண்ணாடிகள் கல்வீசி நொறுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சூனாம்பேடு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். அப்போது 2 போலீசாரும் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Similar News