செய்திகள்

பெருந்துறை அருகே முதியவரை அடித்து கொன்ற 3 பேர் கைது

Published On 2018-02-02 18:36 IST   |   Update On 2018-02-02 18:36:00 IST
பெருந்துறை அருகே நேற்று காலை முதியவரை அடித்து கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பேருராட்சி, நரிப்பாளையம் பிரிவு அருகேயுள்ள பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 52).

பவர் லூம் தறிப்பட்டறை உரிமையாளரான இவர் அதே பகுதியில் தனது மனைவி பூங்கொடி (46), மகள்கள் ஷியாமளா(19), கல்பனா(16) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கவேலின் தாயார் மாராயம்மாள் (78) தனியாக வசித்து வந்தார். இவர்களது வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தின் அருகே உறவினரான ஆறுமுகம்(60) தனது மனைவி ஜெயமணி, மகன் கோவிந்தசாமி மற்றும் மகள் சுகுணாவுடன் வசித்து வந்தார்.

விவசாயியான ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இது தொடர்பாக ஆறுமுகத்தின் குடும்பத்தினர் தங்கவேலுவிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் ஆறுமுகத்தை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க தங்கவேல் உதவி செய்தார்.

சிகிச்சை பெற்ற ஆறுமுகம் வீடு திரும்பினார். அவர் தன்னை மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்து தன்னை பைத்தியக்காரன் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு செய்து விட்ட தாக கூறி தங்கவேலிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

நேற்று காலை அவர் தங்கவேலின் வீட்டிற்கு சென்றார். தங்கவேல் வீட்டின் பின்பகுதியில் பால் கறந்து கொண்டிருந்தார். தங்கவேல் வீட்டில் இல்லை என்று நினைத்து ஏமாற்றமடைந்த ஆறுமுகம் அருகில் கிடந்த தறிப்பட்டறைக்கு பயன்படுத்தும் இரும்பு ராடை எடுத்துக்கொண்டு தங்கவேலின் தாயார் மாராயம்மாள் வீட்டிற்குள் சென்றார்.

அங்கு கட்டிலில் படுத்திருந்த மாராயம்மாளை இரும்பு ராடால் தாக்கினார். மாராயம்மாள் சத்தம் போடவே அருகில் உள்ள பவர் லூம் தறிப்பட்டறையில் வேலை பார்த்த நபர்கள் மற்றும் தங்கவேலின் குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

அவர்களை கண்ட ஆறுமுகம் தனது கையில் இருந்த இரும்பு ராடை வீட்டின் வாசலில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். வீட்டின் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த மாராயம்மாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே மாராயம்மாளை தாக்கிவிட்டு தப்பி சென்ற ஆறுமுகத்தை சிலர் துரத்திச் சென்று பிடித்தனர்.

பின்னர் அருகிலுள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதில் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காஞ்சிக் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகத்தை அடித்து கொன்றது தங்கவேல் மற்றும் அவரது பவர் லூம் தறிப்பட்டறையில் வேலை பார்த்து வரும் தண்டபாணி மற்றும் கார்த்தி என்பது தெரியவந்தது.

எனவே அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தங்கவேல், கார்த்தி, தண்டபாணி ஆகிய 3 பேரும் போலீசில் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  #tamilnews

Similar News