செய்திகள்

பெருந்துறை அருகே இரட்டை கொலை: போலீசார் விசாரணை

Published On 2018-02-01 16:31 IST   |   Update On 2018-02-01 16:31:00 IST
பெருந்துறை அருகே பெண்ணை கொன்றவரை மர்ம நபர்கள் கட்டி வைத்து அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் அடுத்த பெத்தாம்பாளையம், நரிப்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி.

இவரது வீட்டின் பின்புறத்தில் ஆறுமுகத்தின் சித்தி மாராயம்மாய் (78), தனது மகன் தங்கவேலுடன் (55) வசித்து வந்தார். தங்கவேல் அந்த பகுதியில் தறி குடோன் நடத்தி வருகிறார். ஆறுமுகம் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவரை தங்கவேல் கோவைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

அங்கு மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 25 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் டாக்டர்கள் கூறியபடி ஆறுமுகம் சரியாக மருந்து சாப்பிடவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை தங்கவேலுவின் வீட்டுக்கு ஆறுமுகம் சென்றார்.

அங்கு தங்கவேலு இல்லை. மாராயம்மாள் மட்டும் இருந்தார். அவரிடம் ஆறுமுகம் தகராறில் ஈடுபட்டார்.

‘‘என்னை ஏன் மனநிலை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றீர்கள்? நான் நன்றாகத்தானே இருந்தேன். உங்களால் எனக்கு ஊருக்குள் கெட்ட பெயராகிவிட்டது. ஊரார் என்னை ஒரு மாதிரி பேசுகிறார்கள்’’ என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றி மாராயம்மாளுக்கும், ஆறுமுகத்துக்கும் இடையே மோதலானது. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாராயம்மாளை தாக்கினார்.

இதில் மாராயம்மாள் நிலை குலைந்து கீழே மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில் தங்கவேலுவும், அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்தனர்.

தங்கவேலு மயங்கி கிடந்த தனது தாயை தூக்கிக் கொண்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாராயம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே மாராயம்மாளை தாக்கிய ஆறுமுகத்தை அந்த பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் பிடித்தனர். ஆறுமுகத்தின் கைகளை துண்டால் கட்டினர்.

பின்னர் கம்பு, தடி, கைகளால் சரமாரியாக ஆறுமுகத்தை தாக்கினர். இதில் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அங்கிருந்து தூக்கி சென்று 100 அடி தூரத்தில் உள்ள ரோட்டோரம் வீசினர்.

இது பற்றி காஞ்சிக் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆறுமுகத்தை தாக்கி கொலை செய்த மர்ம நபர்கள் யார்-யார்? என்பது தெரியவில்லை. அவர்கள் யார்? என்று கண்டு பிடித்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையுண்ட ஆறுமுகத்துக்கு ஜெயமணி என்ற மனைவியும், கோவிந்தசாமி என்ற மகனும், சுகுணா என்ற மகளும் உள்ளனர்.

இந்த இரட்டை கொலை சம்பவம் பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Similar News