செய்திகள்
எடப்பாடி அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
எடப்பாடி அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில், நள்ளிரவில் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பில்லுக்குறிச்சி அருகே உள்ள ஓணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (62),
தி. மு. க. முன்னாள் பேரூர் செயலளர். இவரது மனைவி மலர்கொடி (58), கருணாநிதியின் தாயார் அத்தாயியம்மாள் (80) இவர்கள் மூவரும் ஓணாம்பாறை பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்ட மலர்கொடி, பள்ளிபாளையம் பகுதியில் வசித்துவரும் தனது மகள் சாரதா (38) வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். ஞாயிறு அன்று இரவு கருணநிதி தனது தாயார் அத்தாயியம்மாள் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென சத்தம் கேட்டு எழுந்த கருணாநிதி, வீட்டுக்குள் மங்கி குள்ளா அணிந்த 3 மர்ம நபர்கள் நடமாடுவதை கண்டு திடுக்கிட்டு கூச்சலிட்டார்.
இதனை அடுத்து வேகமாக வீட்டில் இருந்து வெளியேறிய மர்ம நபர்கள், வீட்டுக்கு வெளியில் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி மறைந்தனர். வீட்டில் உள்ள பீரோ, பெட்டி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதையும், வீட்டின் கதவு திறந்து கிடப்பதையும் கண்ட கருணாநிதி அவற்றில் இருந்து தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். நள்ளிரவில் வீடுபுகுந்த மர்ம நபர்கள் 12 . 5 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப்பணத்தினை கொள்ளையடித்து சென்றதாக, கருணாநிதி பூலாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த பூலாம்பட்டி போலீசார், சம்பவ இடத்தில் முகாமிட்டு தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews