செய்திகள்

வெள்ளகோவிலில் வியாபாரி வீட்டில் நகை - பணம் கொள்ளை

Published On 2018-01-29 15:45 IST   |   Update On 2018-01-29 15:45:00 IST
வெள்ளகோவிலில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் உப்பு பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (49). எண்ணை வியாபாரி. சம்பவத்தன்று காலை இவர் தனது குடும்பத்துடன் கடைக்கு சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஷ்பாபு வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். ரமேஷ்பாபு வீட்டின் அருகில் ஒரு கார் நின்று உள்ளது. விசே‌ஷ நாட்கள் என்பதால் ஏராளமான கார்கள் வந்து சென்றதால் அதனை பொதுமக்கள் கவனிக்கவில்லை.

எனவே கொள்ளையர்கள் காரில் வந்து கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

வெள்ளகோவில் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் நடராஜ். பழைய பேப்பர் கடை வைத்துள்ளார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார்.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை திறந்துள்ளனர். அங்கு நகை, பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

நடராஜ் வீட்டின் அருகில் பெயிண்டர் மோகன் வசித்து வருகிறார். இவரும் குடும்பத்துடன் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார்.

அவரது வீட்டின் கதவை உடைத்து சென்ற கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது வெள்ளகோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News