செய்திகள்

சென்னை விமான நிலையத்தின் பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

Published On 2018-01-29 10:21 IST   |   Update On 2018-01-29 10:21:00 IST
சென்னை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்குள்ள பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையம் இன்று காலை எப்போதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அப்போது வாலிபர் ஒருவர் திடீரென அங்குள்ள பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் காலை 6.45 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நின்று கொண்டிருந்தார். வட மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம் கொண்ட அந்த வாலிபர் அரைக்கால் டிரவுசர் அணிந்திருந்தார்.

இந்த பகுதியில் கார்-மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்காக பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் உள்ள இந்த பாலத்தில் இருந்து வாலிபர் திடீரென கீழே குதித்தார்.

இதில் உடல் சிதறிய அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதைப் பார்த்ததும் விமான நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணையை முடுக்கி விட்டனர். தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எதற்காக அவர் விமான நிலையத்துக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இது பற்றிய விவரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட வாலிபர் கைப்பை ஒன்றையும் வைத்திருந்துள்ளார். அதில் அவரை பற்றிய தகவல்கள் உள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கையில் என்ன இருந்தது? வாலிபர் பற்றிய தகவல்கள் கிடைத்ததா? என்பது பற்றிய விவரங்களை போலீசார் உடனடியாக தெரிவிக்கவில்லை.

விமான நிலையத்தில் எப்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பை தாண்டி, பயணிகளால் எதுவும் செய்ய முடியாது என்கிற நிலையே இருக்கும். இதையெல்லாம் தாண்டி விமான நிலையத்தின் உள்ளேயே வாலிபர் ஒருவர் பாலத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது பற்றி உரிய விசாரணை நடத்தவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Tamilnews

Similar News