ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரையில் தி.மு.க.வினர் சாலை மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
ராமநாதபுரம்:
தமிழக அரசு பல மடங்கு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர். பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெறக்கோரி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றனர்.
பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று சாலை மறியல் நடத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ராமநாதபுரம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் 28 இடங்களில் சாலை மறியல் நடந்தது. ராமநாதபுரம் புது பஸ் நிலையத்தில் நகர செயலாளர் கார்மேகம் தலைமையில் நடந்த மறியலில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இன்பாரகு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அகமதுதம்பி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்.
அரண்மனை பகுதியில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் தலைமையிலும், பாரதி நகரில் மண்டபம் ஒன்றிய மேற்கு செயலாளர் கனகராஜ் தலைமையிலும், பனைக்குளத்தில் மாவட்ட பிரதிநிதி ஜீவானந்தம் தலைமையிலும், ராமேசுவரத்தில் முன்னாள் நகர செயலாளர் ஜான்பாய் தலைமையிலும், மண்டபத்தில் நகர செயலாளர் ராஜா தலைமையிலும், கடலாடியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமையிலும் சாலை மறியல் நடந்தது.
பரமக்குடி பஸ் நிலையத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப.திவாகரன், நகர செயலாளர் சேதுகருணாநிதி மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பரமக்குடி ஐந்துமுனை ரோடு, நயினார்கோவில், கமுதி, திட்டக்குடி, உச்சிப்புளி, கீழக்கரை, திருப்புல்லாணி, முதுகுளத்தூர், திருவாடானை, சாயல்குடி உள்ளிட்ட 28 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் நடத்தினர்.
மறியல் தொடங்கிய உடனே அங்கு ஏற்கனவே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி தி.மு.க.வினரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 18 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. அருப்புக்கோட்டையில் நடந்த சாலை மறியலில் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மல்லாங்கிணற்றில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையிலும், ராஜபாளையத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையிலும் சாலை மறியல் நடந்தது. சிவகாசி, திருத்தங்கல், காரியாபட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, திருச்சுழி, வீரசோழன், நரிக்குடி உள்ளிட்ட 18 இடங்களில் மறியலில் பங்கேற்ற தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 28 இடங்களில் சாலை மறியல் நடந்தது. திருப்பத்தூரில் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் நடந்தது. சிவகங்கையில் நகர செயலாளர் துரைஆனந்த், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து ஆகியோர் தலைமையிலும், இளையான் குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
திருப்புவனத்தில் நடந்த மறியலில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், தேவகோட்டையில் மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ஆகியோர் தலைமையிலும் மறியல் நடந்தது.
3 மாவட்டங்களில் நடந்த சிறைநிரப்பும் போராட் டங்களில் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் கலந்து கொண்டன.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே மாநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வேலுச்சாமி, தளபதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் மூர்த்தி எம்.எல்.ஏ., மணிமாறன் தலைமையில் நடந்தது.
இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.