செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: தஞ்சையில் வைகோ குற்றச்சாட்டு

Published On 2018-01-29 01:44 GMT   |   Update On 2018-01-29 01:44 GMT
கர்நாடக மக்களின் ஓட்டுக்காக, தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று தஞ்சையில் வைகோ குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

50 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகி போகிற பேராபத்து சூழ்ந்து உள்ளது. 50 லட்சம் ஏக்கரில் இருக்கின்ற பணத்தை போட்டு சாகுபடி செய்து பால்பருவத்தில் வந்திருக்கிற நிலையில் இன்னும் 2 தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்டால் தான் 50 லட்சம் ஏக்கர் சம்பா பயிரை காப்பாற்ற முடியும். மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. குடிநீருக்கு வழியில்லாமல் போகும். கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமல் போகும்.

இவ்வளவு பெரிய ஆபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமரை சந்தித்து இருக்க வேண்டும். அந்த கடமையை அவர் செய்யவில்லை. தமிழகத்துக்கு கடமை ஆற்றாத முதல்-அமைச்சரை கண்டிக்கிறோம். கர்நாடகம் தொடர்ந்து நம்மை வஞ்சிக்கிறது. 192 டி.எம்.சி. தண்ணீரில் இதுவரை 100 டி.எம்.சி. தண்ணீர் கூட நமக்கு வந்து சேரவில்லை.

உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க சொன்ன போதும் மத்திய அரசு அமைக்கவில்லை. பிரதமர் மோடி அரசு தமிழகத்துக்கு எதிரான அரசு, டெல்டா மக்களுக்கு எதிரான அரசு, விவசாயிகளுக்கு எதிரான அரசு. தொடர்ந்து இந்த வஞ்சகத்தை செய்கிறது.

மேகதாது, ராசிமணல் பகுதியில் கர்நாடகம் அணை கட்ட போகிறது. அதற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டி விட்டது. இதனால் நமக்கு தண்ணீர் வராது. நாம் அழிந்து போவதா? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சோழவளநாடு அனுபவித்து வந்த சட்டப்பூர்வமான உரிமையை நாம் இழக்கக்கூடாது. கர்நாடக மக்களின் ஓட்டுக்காக தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.



தமிழக மக்களை வஞ்சிக்கும் நரேந்திர மோடி அரசை கண்டித்து விவசாய சங்கங்கள், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைசிறுத்தைகள், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினர். #tamilnews
Tags:    

Similar News