செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோபி கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக சாலை மறியல்

Published On 2018-01-24 16:47 IST   |   Update On 2018-01-24 16:47:00 IST
கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து இன்று 2-வது நாளாக கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோபி:

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசியல் கட்சியினரும், கல்லூரி மாணவ-மாணவிகளும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்திலும் பல இடங்களில் ஆர்ப்பாட் டம் உள்ளிட்ட போராட்டம் நடந்து வருகிறது. கோபியிலும், சத்தியமங்கலத்திலும் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி அருகே திரண்டு சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இந்த நிலையில் கரட்டடிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து இன்று 2-வது நாளாக கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் 500 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் இன்று நடந்த சாலை மறியலில் 2 ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இன்று மதியம் வரை மாணவ-மாணவிகளின் போராட்டம் நீடித்தது.

Similar News