செய்திகள்

நில மோசடி வழக்கில் ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது

Published On 2018-01-21 11:13 GMT   |   Update On 2018-01-21 11:13 GMT
நில மோசடி வழக்கில் ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் உறவினர் 4 பேரும் கைதாகி உள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, கொலை முயற்சி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்து வந்த நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

அவருக்கு சொந்தமான ஏறத்தாழ 110 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கிய நிலையில் ஸ்ரீதர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஸ்ரீதரின் மனைவி மற்றும் சிலர் தன்னை பணமோசடி செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த லட்சுமணனுக்கு காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த குமாரவாடி என்ற பகுதியில் 32 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை தெரிந்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் மனைவி குமாரி மற்றும் சிலர் லட்சுமணனிடம் மிரட்டல் விடுத்து 32 ஏக்கர் நிலத்தை 15 கோடிக்கு விற்க கேட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் 11 கோடி மட்டுமே கொடுத்துள்ளனர். கடந்த 1 வருட காலமாக மீதமுள்ள 4 கோடியை லட்சுமணன் கேட்டதற்கு தரமுடியாது என மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஸ்ரீதரின் மனைவி குமாரி, உறவினர்கள் அருள், நிர்மலா மற்றும் மகேந்திரன், கண்ணன் ஆகியோர் மீது 4 கோடி மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட சாலவாக்கம் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ரவுடி ஸ்ரீதர் இறந்த பிறகு காஞ்சீபுரத்தில் அடுத்த தாதாவாக உருவாகுவதற்கு மோதல் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரை சார்ந்த வர்கள் ஆகியோர்களை கண்காணிப்பதற்கென்றே காஞ்சீபுரம் மாவட்ட போலீசில் தனிப்படை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News