செய்திகள்

போலீசாரின் எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் பலி

Published On 2018-01-17 17:06 GMT   |   Update On 2018-01-17 17:06 GMT
வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 5 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக் காட்டுத்துறை சேர்ந்த 20 பேர் நேற்று தை அமா வாசையையொட்டி கடலில் குளிக்க சென்றனர்.

படகை ஆறுக்காட்டுத் துறையை சேர்ந்த ரகூம்(வயது 30) என்பவர் ஓட்டினார்.

பின்னர் அவர்கள் அனைவரும் கடலில் குளிப்பதற்காக கடற்கரையோரம் படகில் இருந்தப்படியே நீரில் குதித்தனர்.

அப்போது ஆறுக்காட்டுத் துறை சேர்ந்த பிரவீன்குமார் (20), பரத் (16), யுகேந்திரன் (17), கனிஷ்குமார் (18), ராஜாமணி (16) ஆகியோர் கடலில் குளித்தனர். இதில் அவர்கள் குளித்த பகுதி சேறாக இருந்ததால் அவர்கள் சிக்கிகொண்டனர். இதில் அவர்கள் 5 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

மற்றவர்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி மூச்சு திணறி உயிருக்கு போராடினர். உடனே அவர்களை கடலில் புனித நீராடி வந்த படகுகளில் வந்தவர்கள், மற்றும் மீனவர்கள் மீட்டு கொண்டு வந்தனர். சசின் (17), குகன் (19) ஆகிய இருவரும் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேதராமன் (19), நிதிஷ்குமார் (17), பிரசன்னகுமார்(20) ஆகிய 3 பேரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலில் மூழ்கி பலியான 5 பேருமே மாணவர்கள் ஆவர். பலியான பரத், தோப்புத்துறையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் படித்து வந்தார். யுகேந்திரன் தஞ்சையில் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். கனிஷ்குமார், ராஜாமணி ஆகியோர் நாகை அருகே பாப்பாகோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர். பிரவீன்குமார் பட்டுக்கோட்டையில் ஐ.டி.ஐ. யில் படித்து வந்தார்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 5 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியானதால் கிராம மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை ஆர்.டி.ஓ. வேலுமணி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆறுக்காட்டுத்துறையில் அடக்கம் செய்யப்பட்டது.

கடலில் மூழ்கி 5 மாணவர்கள் பலியானதை பற்றி உருக்கமான தகவல்களை கிடைத்துள்ளது.

படகில் பயணம் செய்த மாணவர்கள் கடற்கரையை நெருங்கிய போது ரோந்து பணியில் இருந்த போலீசார் , இது ஆழமான பகுதி. இங்கு இறங்கி குளிக்க கூடாது என எச்சரித்தனர்.

இதை பொருட்படுத்தாமல் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது அவர்கள் சேற்றில் சிக்கியுள்ளனர். இதில் நீச்சல் தெரியாத 5 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகி உள்ளனர் என்பது தெரிய வந்தது. #tamilnews

Tags:    

Similar News