செய்திகள்
அரியலூர் அருகே பூசாரி அடித்துக்கொலை
திருமானூர் அருகே சொத்து தகராறில் கோவில் பூசாரி அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டிராதீர்த்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மூக்கன் (வயது 84). இவரது மனைவி தர்மம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை. எனவே மூக்கன் தனது தம்பி பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். மூக்கன் அதே கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
இதற்கிடையே மூக்கனுக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவற்றை பெறுவதில் தம்பி பிள்ளைகளுக்கிடையே கடுமையான போட்டி இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் மூக்கனிடம் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படாமல் இருந்தது. அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு மூக்கன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே இதுகுறித்து அவர்கள் திருமானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பார்த்தபோது வீட்டிற்கு பிணமாக கிடந்த மூக்கன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை மர்ம நபர்கள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொத்து தகராறில் மூக்கனின் தம்பி பிள்ளைகள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணை நடத்தினர். #tamilnews