செந்துறை அருகே வீட்டில் நகை-பணம் கொள்ளை
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பரமானந்தம். இவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ராஜகுமாரி(வயது 52). இவர்களுக்கு அபர்ணா என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் செந்துறையில் இருந்து திருச்சிக்கு சென்று வர முடியாது என்பதால் தாய், மகள் இருவரும் திருச்சியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். விடுமுறை தினங்களில் மட்டும் செந்துறையில் உள்ள வீட்டிற்கு செல்வார்கள்.
இந்நிலையில் செந்துறையில் உள்ள வீட்டில் திருட்டு போயிருப்பதாக ராஜகுமாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் செந்துறைக்கு விரைந்து சென்று வீட்டை பார்வையிட்டார்.
மேலும் செந்துறை போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டு கதவின் பூட்டை ரம்பத்தால் அறுக்கப்பட்டு திறந்ததற்கான அடையாளங்கள் இருந்தது. பூட்டை உடைத்ததால் பொதுமக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் ரம்பத்தால் அறுத்து மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம், அரை பவுன் நகை மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். போலீசாரிடம் தடயங்கள் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை வீடு முழுவதும் தூவி சென்றுள்ளனர். ராஜகுமாரி பல லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை வங்கி லாக்கரில் வைத்துள்ளார். இதனால் அவை கொள்ளையர்களிடம் இருந்து தப்பின.
கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.