செய்திகள்
அரியலூரில் சிமெண்ட் ஆலை ஊழியர் வீட்டில் கொள்ளை
அரியலூர் அருகே பட்டப்பகலில் சிமெண்ட் ஆலை ஊழியர் வீட்டில் டிப்டாப் ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள அமீனாபாத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன், அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் சக்திவேலின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலையில் வயல் வேலை முடிந்ததும், வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் அடைத்திருந்த வேலியை தாண்டி, 2 டிப்டாப் ஆசாமிகள் ஓடியுள்ளனர்.
இதனை பார்த்த தாய், மகள் இருவரும் திருடன் திருடன் என கூச்சலிட்டவாரே பின் தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனாலும் தப்பி ஓடிய மர்ம ஆசாமிகள் தாங்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த ஒரு காரில் ஏறி தப்பி சென்றனர். பின்னர் இது குறித்து மகன் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததோடு, 3 பீரோவின் கதவுகளும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 2 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #tamilnews