செய்திகள்
செந்துறை அருகே விபத்தில் முதியவர் பலி
செந்துறை அருகே பைக் விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
செந்துறை அருகே உள்ள பொன்னேறி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 60). சம்பவத்தன்று இவர் சென்னிவனத்தில் நடந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது உறவினர்கள் ரமேஷ் (35), ஜெயசந்திரன் (40) ஆகியோருடன் பைக்கில் சென்றார்.
பின்னர் அங்கு நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கிருந்து பொன்னேறி நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர். அரியலூர்- செந்துறை நெடுஞ்சாலையில் சென்றபோது, அகரம் சீனிவாசன் நகர் அருகே திடீரென பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இதில் படுகாயமடைந்த 3பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மற்றும் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே ஆதிமூலம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ரமேஷ், ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து செந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆதிமூலத்திற்கு 4 மகள்கள் உள்ளனர். #tamilnews