செய்திகள்

எண்ணூரில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

Published On 2017-12-29 08:23 GMT   |   Update On 2017-12-29 08:23 GMT
எண்ணூரில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எண்ணூர்:

எண்ணூரில் உள்ள காட்டுகுப்பம் மீனவ கிராமத்தில் சில நாட்களாக குழாய்களில் குடிநீர் சரியாக வரவில்லை. குறைந்த அளவே வந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.

மேலும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வந்ததால் பயன்படுத்த முடியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையல் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் எண்ணூர் விரைவு சாலையில் திரண்டனர். அவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரை பாட்டில்களில் கொண்டு வந்திருந்தனர். இதுபற்றி பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சரியாக குடிநீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

அப்படியே வந்தாலும் குறைந்த அளவே வருகிறது. குடிநீரும் மஞ்சள் நிறத்தில் அசுத்தமாக இருக்கிறது. அதனால் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறோம் என்றனர்.

மறியலால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News