செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே மணல் அள்ளிய லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்

Published On 2017-12-28 12:13 GMT   |   Update On 2017-12-28 12:13 GMT
ஒட்டன்சத்திரம் அருகே மணல் அள்ளிய லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒடன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான குவாரி உள்ளது. இங்கு வருவாய்த்துறையினரின் அனுமதி பெற்று மண் எடுத்து வந்தனர். ஆனால் கிராவல் மண் எடுப்பதற்கு பதிலாக ஆற்று மணல் அதிக அளவில் எடுக்கப்பட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நேற்று 3 லாரிகளில் மணல் நிரப்பிக் கொண்டு இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு லாரிகளை செல்ல விடாமல் சிறைபிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் பழனி டி.எஸ்.பி. முத்துராஜ் தலைமையில் இடையகோட்டை இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கையில், கடும் வறட்சியான இப்பகுதியில் மண் அள்ள அனுமதி பெற்று மணல் திருடிக் கொண்டு இருக்கின்றனர்.

ஒரு லோடுக்கு ரூ.5 ஆயரம் ரசீது போட்டு தரப்படுகிறது. ஆனால் வெளிமார்க்கெட்டில் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் இப்பகுதியில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதன் பிறகு அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தனர். மணல் அள்ளிய லாரிகளை இடையகோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். 10 நாட்களுக்கு மணல் அள்ள தடை விதிப்பதாகவும், 3-ந் தேதி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News