செய்திகள்

பாடப்புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு: வாசன்-சரத்குமார் பாராட்டு

Published On 2017-12-27 10:56 GMT   |   Update On 2017-12-27 10:56 GMT
பிளஸ்-1 வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் வரலாறு சேர்க்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறித்தற்கு ஜி.கே.வாசன்-சரத்குமார் ஆகிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘‘பிளஸ்-1 வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் வரலாறு சேர்க்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஊடக தமிழில் சி.பா.ஆதித்தனார் மேற்கொண்ட சீர்திருத்தம் பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ளது. மேலும் எளிமையான எழுத்து சீர்திருத்தத்தை ‘தினத்தந்தி’ பத்திரிகையில் பயன்படுத்தியதால் கிராமப்புறத்தில் உள்ள எளிய மக்களும் புரிந்து கொண்டது தொடர்பான விவரங்களும் இடம் பெற உள்ளன.

பல்வேறு சிறப்புகளுக்கும், புகழுக்கும் உரிய மறைந்த சி.பா.ஆதித்தனாரின் வரலாற்றை தமிழ் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பால், சி.பா.ஆதித்தனாரின் பெருமை, திறமை, நல்லெண்ணத்தை மாணவர்கள் அறிந்து பின்பற்றக்கூடிய ஒரு நல்ல சூழல் ஏற்படும்.’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், அவர் ஊடகத் தமிழில் ஏற்படுத்திய எழுத்து சீர்திருத்தத்தை 11ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இணைக்கவிருப்பது மகிழ்ச்சிக் குரிய செய்தியாகும்.

ஊடகத் தமிழில் இவர் ஏற்படுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தை முதன் முதலில் தினத்தந்தி பத்திரிக்கையில் வெளிப்படுத்தியதன் விளைவாக, கிராமத்திலுள்ள எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில், ஊடகத்தமிழ் என்ற முறையில் அவருடைய தமிழ் எழுத்துக்களின் சீர்திருத்தம், படிக்காத பாமரனும், கிராமவாசிகளும் எளிய முறையில் படிக்க வசதியாக பேச்சுத்தமிழை நடைமுறைத் தமிழாக மாற்றித் தந்தவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள். தமிழகம் முழுவதும் அனைவரையும் பத்திரிகை படிக்க வைத்த பெருமையும் அவருக்கு உண்டு.

சி.பா.ஆதித்தனார் வாழ்க்கை வரலாற்றினை இன்றைய மாணவ- மாணவியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அவர் ஊடகத் தமிழ் சீர்திருத்தங்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் முழுமையான வாழ்க்கை வரலாற்றை புத்தகங்களில் பாடமாக வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகை துறையில் எழுத்து சீர்திருத்தத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.

அவர் தமிழுக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில், அவரை பற்றிய பாடம் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் என்று அறிவித்ததற்கு தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

இதேபோல தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News