செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே லோடு வேன் மீது லாரி மோதல்: 2 மீன் வியாபாரிகள் பலி

Published On 2017-12-27 11:58 IST   |   Update On 2017-12-27 11:58:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே லோடு வேன் மீது லாரி மோதலில் 2 மீன் வியாபாரிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை காசிமேடுக்கு இன்று அதிகாலை வியாபாரிகள் மீன் வாங்க லோடு வேனில் புறப்பட்டனர். போகும் வழியில் மற்ற வியாபாரிகளை ஏற்றிக் கொண்டு சென்றனர்.

இதில் சுங்குவார்சத்திரத்தை அடுத்த சிறுமாங்கோடு பகுதியை சேர்ந்த காலன் (35), காஞ்சீபுரம் தர்மா (30) உள்ளிட்ட 16 பேர் பயணம் செய்தனர்.

சுங்குவார்சத்திரம் அடுத்த மாம்பாக்கம் பஸ்நிறுத்தம் அருகே வியாபாரி ஒருவரை ஏற்றுவதற்காக வேனை டிரைவர் நிறுத்தி இருந்தார்.

அப்போது வேலூரில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி திடீரென லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் வேனில் இருந்த காலன், தர்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்த 14 பேரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News