செய்திகள்

ஹாசினி கொலை வழக்கு: செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் மீண்டும் ஆஜரான தஷ்வந்த்

Published On 2017-12-27 08:51 IST   |   Update On 2017-12-27 08:51:00 IST
சிறுமி ஹாசினி கற்பழித்து, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
செங்கல்பட்டு:

சென்னை போரூரை சேர்ந்தவர் தஷ்வந்த். இவர் ஹாசினி என்ற சிறுமியை கடந்த ஆண்டு கற்பழித்து, எரித்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். மும்பையில் பதுங்கி இருந்த அவரை தமிழக போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், ஹாசினியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு நீதிபதி வேல் முருகன் உத்தரவிட்டார். இதனையடுத்து, கடந்த 18-ந் தேதி மற்றும் 20-ந் தேதி செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து சிறுமி ஹாசினியை கற்பழித்து, எரித்து கொலை செய்தது தஷ்வந்த் தான் என்பது 50 சதவீதம் உறுதியாகிவிட்டதாக தெரிவித்த நீதிபதி வேல்முருகன், வழக்கின் அடுத்த விசாரணை 26-ந் தேதி (நேற்று) நடைபெறும் என்றும், அன்றைய தினம் தஷ்வந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்காக போலீஸ் பாதுகாப்புடன் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் தஷ்வந்த் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுமதி, தலையாரி மோகன்தாஸ், கோவில் தர்மகர்த்தா பிரபா ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

Similar News