செய்திகள்

பெண்கள் கூட்டத்தில் பைக் சாகசம் செய்த 3 வாலிபர்கள் கைது

Published On 2017-12-25 12:49 IST   |   Update On 2017-12-25 12:49:00 IST
திருவான்மியூர் அருகே பெண்கள் கூட்டத்தில் பைக் சாகசம் செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 27)., அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேக்சுதீன் (20), சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜான்(20). 3 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு 1 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் பெசன்ட்நகர் சர்ச்சுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெண்கள் சாலை ஓரமாக பெசன்ட்நகர் சர்ச்சுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சண்முகம், சேக்சுதீன், ஜான் ஆகிய 3 பேரும் பெண்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் சர்ச்சுக்கு சென்ற பெண்கள் அவதிக்குள்ளானார்கள்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு போலீசார் 3 மோட்டார் சைக்கிள்களையும் மடக்கினார்கள் அப்போது 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் ஆர்.சி. புத்தகம் இல்லாததை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும் அவர்களிடம் டிரைவிங் லைசன்சும் இல்லை. ஒரு வண்டிக்கு நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை.

இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சண்முகம், சேக்சுதீன், ஜான் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அது அவர்களின் மோட்டார் சைக்கிள் தானா அல்லது திருட்டு மோட்டார் சைக்கிள்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News