செய்திகள்

மதுராந்தகம் அருகே அரசு பஸ் மோதி கார் ஏரியில் பாய்ந்தது: 5 பேர் பலி

Published On 2017-12-25 12:31 IST   |   Update On 2017-12-25 12:31:00 IST
மதுராந்தகம் அருகே அரசு பஸ் மோதி கார் ஏரியில் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம்:

புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிக்கண்ணு.இவர் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு விசே‌ஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் தமிழ்செல்வி (60), தினேஷ் (29), ராதிகா (30), பிரபாவதி (40), சிறுவன் இளம்பரிதி (6) உள்பட 8 பேருடன் காரில் வந்தார். டிரைவர் அஜித் குமார் காரை ஓட்டினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு அவர்கள் புதுக்கோட்டை நோக்கி திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தொழப்பேடு அருகே ஆத்தூர் என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென டீசல் காலியானது. இதையடுத்து காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு டீசல் வாங்குவதற்காக டிரைவர் அஜித் குமார் சென்றார். காரில் மாரிக்கண்ணு உள்பட 8 பேரும் இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து டீசல் வாங்கி வந்த அஜித்குமார், அதனை டேங்கில் ஊற்றி விட்டு காரை இயக்க முயன்றார்.

அப்போது விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென காரின் பின்பகுதியில் லேசாக மோதி சென்று விட்டது. கட்டுப்பாட்டை இழந்த கார் சில அடி தூரம் ஓடி சாலையோரத்தில் இருந்த ஆத்தூர் ஏரிக்கரையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

கரையோரத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால் காரில் இருந்தவர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். மேலும் கார் கவிழ்ந்த போது காயம் அடைந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

இதனால் காரில் இருந்த தமிழ்ச்செல்வி அவரது பேரன் தினேஷ், ராதிகா, பிரபாவதி, அவரது மகன் சிறுவன் இளம்பரிதி, டிரைவர் அஜித்குமாரின் தாய் பிரபாவதி, ஆகிய 5 பேரும் பலியானார்கள்.

அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய டிரைவர் அஜித்குமார், சரோஜா, மாரிக்கண்ணு ஆகியோரை மீட்டனர். அவர்களுக்கு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலியான 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, அச்சுறுப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் சுங்கச்சாவடி உள்ளது. ஏரிக்குள் கார் பாய்ந்த போது அதில் இருந்தவர்கள் காப்பாற்றும்படி கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் ஊருக்கு செல்வதால் கூச்சலிட்டு சென்று இருக்கலாம் என்று நினைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நீண்ட நேரம் மீட்க செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து சத்தம் வந்த பின்னரே விபத்து நடந்து சுமார் ½ மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். விபத்து நடந்த உடன் மீட்கப்பட்டு இருந்தால் உயிர் பலி எண்ணிக்கை குறைந்து இருக்கும்.

மேலும் கார் கவிழ்ந்த இடம் ஏரிக்கரை என்பதாலும் மின்விளக்கு இல்லாததாலும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு கார் கவிழ்ந்து கிடப்பது தெரியவில்லை.

இதேபோல் கார் இயங்கிய நேரத்தில் பஸ் மோதியதால் இதுபற்றி பஸ்சின் டிரைவருக்கு தெரியவில்லை. இதனால் அவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அவர் விபத்து நடந்ததும் பஸ்சை நிறுத்தி இருந்தால் அதிலிருந்த பயணிகள் காரில் இருந்தவர்களை மீட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

விபத்து குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறும்போது, விபத்து நடந்த இடத்தில் ஏரிக்கரையை ஓட்டி தடுப்பு கம்பிகள் இல்லை. எதிர்புறம் உள்ள விழுப்புரம் சாலையில் மட்டும் ஏரிக்கரையையொட்டி தடுப்புகள் உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் தடுப்பு இருந்திருந்தால் அதில் கார் மோதி ஏரிக்குள் விழாமல் தப்பி இருக்கும். எனவே சாலையை ஒட்டி உள்ள ஏரிக்கரையில் தடுப்பு அமைக்க வேண்டும்.

இதேபோன்று விபத்துக்கள் இங்கு அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் சாலையை அகலப்படுத்த வேண்டும்’ என்றனர்.

ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News