தாம்பரம் அருகே மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்தது: 4 வாலிபர்கள் படுகாயம்
தாம்பரம்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் கார்த்திக், ஜீவா, தினேஷ், நாகராஜ். இவர்கள் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்தனர். பின்னர் நேற்று இரவு அவர்கள் திருவண்ணாமலைக்கு காரில் புறப்பட்டனர்.
அதிகாலை 2 மணியளவில் தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் அருகே மேம்பாலத்தில் கார்வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி பாலத்தின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது.
சுமார் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் கார் நொறுங்கியது இதில் காரில் இருந்த கார்த்திக், ஜீவா, தினேஷ், நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 4 பேருக்கும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் பாலத்திலும், அதன் கீழ்பகுதியிலும் அதிக அளவு வாகனங்கன் செல்லவில்லை. இதனால் கார் தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து கீழே விழுந்த போது வாகனங்கள் எதுவும் சிக்க வில்லை. இதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.