செய்திகள்

ஆண்டிமடம் அருகே நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து காளி சிலைகள் கொள்ளை

Published On 2017-12-21 19:30 IST   |   Update On 2017-12-21 19:30:00 IST
ஆண்டிமடம் அருகே நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் காளி சிலைகளை கொள்ளையடித்து சென்றனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலை யூர் கிராமத்தில் ஏரிக்கரையோரம் மிகவும் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் இங்கு ஆண்டு தோறும் திருவிழாவும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கோவில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் இருந்து வருகிறார். தற்போது மார்கழி மாதத்தையொட்டி தினமும் அதிகாலையிலேயே கோவில் திறக்கப்பட்டு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரவு கோவில் அடைக்கப்படும்.

இந்த நிலையில் நேற்று இரவு பூசாரி சுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை மார்கழி மாதத்தை முன்னிட்டு பக்தி பாடல்கள் இசைப்பதற்காக ரேடியோ செட் அமைக்கும் தொழிலாளி கோவிலுக்கு வந்துள்ளார்.

அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கோவிலின் முன் மண்டப பகுதியில் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோவில் தர்மகர்த்தா கலிய பெருமாளுக்கு நேரில் சென்று தகவல் கூறினார்.

இந்த தகவல் கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அடுத்த ஒரு சில விநாடிகளில் கோவில் முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 2½ அடி உயரம் மற்றும் 1 அடி உயரமுள்ள இரண்டு காளி சிலைகள் கொள்ளை போயிருந்தது.

அந்த சிலைகள் வெண் கலத்தால் ஆனதாகும். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் தர்ம கர்த்தா கலியபெருமாள் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மக்கள் நடமாட்டம் அதிக முள்ள, சிறிய கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News