செய்திகள்

3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நர்சுகளுக்கு தமிழக அரசு நோட்டீசு

Published On 2017-11-29 12:27 IST   |   Update On 2017-11-29 12:27:00 IST
3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நர்சுகளுக்கு தமிழக அரசு இன்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
சென்னை:

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 9,990 நர்சுகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

தங்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவ நலப்பணிகள் இயக்குனராக வளாகத்தில் கடந்த 27-ந்தேதி நர்சுகள் போராட்டம் தொடங்கினர்.

நர்சுகளுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் தீர்வு காணப்பட வில்லை. நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நர்சுகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

காலி இடங்களுக்கு ஏற்ப நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நர்சுகளிடம் உறுதி அளித்தார்.

அதை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக நர்சுகள் தெரிவித்தனர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து நர்சுகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் திரும்ப பெறப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி 3-வது நாளாக நர்சுகள் போராட்டம் மீண்டும் நீடித்தது. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆயிரக்கணக்கான நர்சுகள் கூடி போராட்டத்தில் ஈடுபட் டனர். தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என நர்சுகள் அறிவித்தனர். இதனால் இன்று மீண்டும் டி.எம்.எஸ். வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இன்று 3-வது நாளாக நர்சுகள் போராட்டம் நீடிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக அரசு நர்சுகளுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். திரும்பா விட்டால் நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நர்சுகள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.


Similar News