செய்திகள்

கோபி அருகே வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவன் மூழ்கி பலி

Published On 2017-11-27 15:59 IST   |   Update On 2017-11-27 15:59:00 IST
கோபி அருகே வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவனை தண்ணீர் இழுத்து சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தை சேர்ந்தவர் மாருசாமி. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு வொர்க்ஷாப்பில் ‘வெல்டர்’ ஆக பணிபுரிகிறார். இவரது மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு வாசுதேவன் (வயது 13), மவவுலி கிருஷ்ணன் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் வாசுதேவன் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்தது. அதில் கலந்து கொண்டு மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு வந்தான். அங்கு புத்தகப் பையை வைத்துக் கொண்டு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான சரண், சஞ்சய், மாரிச்சாமி ஆகியோருடன் தடப்பள்ளி வாய்க்காலில் குளிக்கச் சென்றான்.

பாசனத்துக்காக தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு பாய்ந்து சென்று கொண்டிருந்தது. வாய்க்காலில் குளித்தபோது திடீரென வாசுதேவனை தண்ணீர் இழுத்து சென்றது. இதை கண்ட அவனது நண்பர்கள் கூக்குரலிட்டனர். ஆனால் அந்த பகுதியில் யாரும் இல்லாததால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. தண்ணீரில் மூழ்கி பலியானான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி ஓடி வந்தனர். கடத்தூர் போலீசாரும் வந்தனர். அவர்கள் வாய்க்காலில் மூழ்கி பலியான மாணவன் உடலை தேடினர். இரவில் மாணவனின் உடலை கண்டு மீட்டனர். பிறகு அவனது உடலை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகிறார்கள்.

Similar News