செய்திகள்

கண்டமங்கலம் அருகே வேன் வயலில் கவிழ்ந்ததில் 10 பெண்கள் காயம்

Published On 2017-11-25 16:37 IST   |   Update On 2017-11-25 16:37:00 IST
கண்டமங்கலம் அருகே வேன் வயலில் கவிழ்ந்ததில் 10 பெண்கள் காயம் அடைந்தனர்.

திருபுவனை:

திருபுவனை அருகே சன்னியாசி குப்பத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வினாயகம்பட்டு, செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் வேலைக்கு சென்று வர தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல் இன்று காலை இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் விநாயகம்பட்டு, செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றி கொண்டு அந்த வேன் புறப்பட்டு வந்தது.

வேனை கரசூரை சேர்ந்த டிரைவர் மணி (25) என்பவர் ஓட்டி வந்தார். அந்த வேன் கண்டமங்கலம் அருகே வனத்தாம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த மரகதம் உள்ளிட்ட 10 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News