செய்திகள்

கருணாநிதியுடன் அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு

Published On 2017-11-17 13:21 IST   |   Update On 2017-11-17 13:21:00 IST
அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேரும் நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
சென்னை:

கடந்த சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் தங்களது அரசியல் பணிகளை கூட்டாகவே செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவால் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னரே 3 பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்று இவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி 3 பேரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று வந்தனர்.

இதனால் சட்ட சபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாகவே இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

இருப்பினும் பல்வேறு வி‌ஷயங்களில் இவர்கள் தமிழக அரசுக்கு எதிரான நிலையை எடுத்து கருத்துக்களை கூறி வருகிறார்கள். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவையில் சுற்றுப் பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கவர்னரின் நடவடிக்கையை கண்டித்தனர். அவர்களோடு சேர்ந்து 3 பேரும் கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேரும் நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். கோபாலபுரம் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 3 பேரும் பொன்னாடை அணிவித்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் ஜெயலலிதாவால் போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்று எம்.எல்.ஏ.க்களான 3 பேரும் கருணாநிதியை சந்தித்தது. மு.க.ஸ்டாலினை தனித்தனியாக சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஏற்படும் சூழல் நிலவிவரும் நிலையில், அதற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி 3 பேரும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. நெருங்குவதை விரும்பாமலேயே உள்ளனர்.

இதனால் 3 பேரும் இந்த அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க. அணியில் சேர வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதுபற்றி தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறும்போது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு இதில் அரசியல் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Similar News