செய்திகள்

லாரி மோதி முதியவர் தலை நசுங்கி பலி: போக்குவரத்து பாதிப்பு

Published On 2017-11-15 17:21 IST   |   Update On 2017-11-15 17:22:00 IST
பெருந்துறை அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது லாரி மோதியதில் தலை நசுங்கி பலியானார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு:

பெருந்துறை அருகே உள்ள பள்ளபாளையம் ஏசுநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 60). இவர் தன் சொந்த வேலை காரணமாக ஈரோடு வந்தார்.

அப்போது மணிக்கூண்டு அருகில் உள்ள மஜித் தெரு அடுத்த கந்தசாமி வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவரது பின்னால் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதபமாக இறந்தார்.

இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் கூடினர். இது குறித்து ஈரோடு கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த முதியவரின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த ரோட்டில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், சென்னை, நாமக்கல், திருச்சி, திருச்செங்கோடு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த வழியாக செல்கிறது. இந்த விபத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் எல்லை மாரியம்மன் கோவில் மற்றும் சத்தி ரோடு வழியாக வாகனங்கள் வரிசையாக நின்றன.

மேலும் அந்த பகுதியில் மொத்த வியாபார கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வியாபாரிகளும் அங்கு திரண்டதால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடியது.

மணிக்கூண்டு மற்றும் கடை வீதிக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக அதிக அளவில் சென்று வருகிறது. அந்த வழியாக வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் பரப்பரப்பான நிலை நிலவியது.

Similar News