செய்திகள்
கனமழையால் தத்தளிக்கிறது சென்னை: இரவு முழுவதும் தொடரும் என அறிவிப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் தலைநகர் சென்னை தத்தளித்து வருகிறது. இரவு முழுவதும் மழை தொடரும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சில நாள்களுக்கு பிறகு இன்று காலை வெயில் அடிக்கத் தொடங்கியது. மாலை வரை மழை பெய்யவில்லை. இதனால் நகரின் பல பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய ஆரம்பித்தது.
இந்நிலையில், மாலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து ஆறு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. முக்கியமான அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றன. பலத்த மழை காரணமாக மின்சார ரெயில்கள் மிகவும் தாமதமாக சென்றன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப முடியாமல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கடும் அவதிப்பட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் 11 செ.மீ. மழையும், துரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேரிடர் மீட்பு படையினர் கூறுகையில், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.