செய்திகள்

7 வழக்குகள் முழு அமர்வுக்கு மாற்றம்: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

Published On 2017-11-02 10:42 GMT   |   Update On 2017-11-02 10:42 GMT
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், குட்கா விவகாரம் உள்ளிட்ட 7 வழக்குகள் முழு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.
சென்னை:

தி.மு.க. கொறடா சக்கரபாணி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

‘தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ந்தேதி முதல்-அமைச்சர் பழனிசாமி அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, அரசு கொறடா ராஜேந்திரனின் உத்தரவை மீறி தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளரான மா.பா. பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இவர்கள் மீது புகார் கொடுத்தும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்த தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை மட்டும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உடனடியாக உத்தரவிட்டுள்ளார். சபாநாயகரின் செயல் பாரபட்சமானது. எனவே, அரசு கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதேபோல, தி.மு.க. எம்.எல்.ஏ., பிச்சாண்டி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட எம்.எல்.ஏ. தகுதியை இழந்து விட்ட ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்அமைச்சராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவி வகிப்பது சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வைத்தியநாதன், இந்த வழக்குகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வருகிற நவம்பர் 2-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக உத்தரவிட்டார்.

‘ஒருவேளை இந்த வழக்குகளை எல்லாம் சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டால், இந்த வழக்கை நான் மட்டும் தனியாக விசாரிக்க மாட்டேன். 3 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வேன்’ என்று கருத்து தெரிவித்தார்.

அதேபோல, சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்றதாக தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சட்டசபை உரிமைக்குழு, அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் கடந்த 27-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கையும், வருகிற நவம்பர் 2ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் சார்பில் அரிமாசுந்தரம், முதல்-அமைச்சர் சார்பில் வைத்தியநாதன், சட்டசபை செயலாளர் சார்பில் விஜய் நாராயண், தினகரன், அபிஷேக் மனு சிங்கி உட்பட பலர் ஆஜராகினர்.

வழக்கை விசாரணைக்கு எடுத்ததும், ‘இந்த ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள 7 வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதே அந்த மனுவின் தற்போதைய நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, ‘அந்த மனுவுக்கு எண் கூட வழங்கப்படவில்லை’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘தற்போது என் முன்புள்ள 7 வழக்குகளும் சபாநாயகரின் அதிகாரம் தொடர்புடையது. இது அரசியலமைப்புச் சட்டம் தொடர்புடையது. இதை தனி நீதிபதி விசாரித்தால் சரி வராது. அதனால், 2-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட முழு பெஞ்ச் விசாரித்தால் தான் சரியாக இருக்கும். எனவே, இந்த வழக்கை முழு அமர்வு விசாரணைக்கு பட்டியலிடும்படி, தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரை செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
Tags:    

Similar News