செய்திகள்

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - தென் தமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்

Published On 2017-11-02 14:12 IST   |   Update On 2017-11-02 14:12:00 IST
தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தென் தமிழகத்தில் பலத்த மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பலத்த மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்திலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

கனமழையை பொறுத்தவரை தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும்.



சென்னையைப்பொறுத்தவரை நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. 30-ந்தேதி மிக கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். தற்போது மழை குறையும். அறிகுறி காணப்படுவதால் மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

நேற்று இரவு மழை சற்று ஓய்ந்தது. சாரல் மட்டும் இருந்தது. இன்றும் மழை பெய்யவில்லை. 3 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் அடித்தது.

மழை பெய்யாததால் தேங்கி கிடக்கும் தண்ணீர் படிப்படியாக வடிய தொடங்கியது.

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் பெய்த மழை அளவு (செ.மீ.) வருமாறு:-

நெல்லை-9, சிதம்பரம், கேளம்பாக்கம், ஸ்ரீவைகுண்டம்-8, நாகை, சேரன் மகாதேவி, வேதாரண்யம்-7, தரங்கம்பாடி, ஓட்டப்பிடாரம், காரைக்கால்-6, பரங்கிப்பேட்டை, மகாபலிபுரம், சீர்காழி, ராதாபுரம்-5, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், ஆனைக்காரன் புதூர், சத்தியபாமா பல்கலைக்கழகம், நுங்கம்பாக்கம்-4, மூலனுர், கொடுமுடி, நாங்குநேரி, கரூர், வந்தவாசி, கன்னியாகுமரி, பாபநாசம், ராஜபாளையம், தூத்துக்குடி-3.

Similar News