செய்திகள்

மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலி: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-02 07:30 GMT   |   Update On 2017-11-02 07:30 GMT
மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை:

சென்னை கொடுங்கையூரில் மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பாவனா, யுவஸ்ரீ ஆகிய 2 சிறுமிகள் பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் இன்று ஆஜராகி கூறியதாவது:-

கொடுங்கையூரில் தேங்கிக் கிடந்த மழை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த தண்ணீரில் கால் வைத்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ ஆகியோர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த உயிர் இழப்புக்கு அதிகாரிகளின் கவனக்குறைவான செயலே காரணமாகும்.

மின்சார இணைப்பு பெட்டிகள் எல்லாம் முறையாக மூடிவைக்கப்படாமல் இருந்ததாலும், பராமரிக்கப்படாததாலும், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் தகுந்த உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்.

அந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு போதிய இழப்பீடு வழங்கவும், சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கியிருப்பது குறித்தும் அரசின் கருத்தை கேட்டறிந்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து அரசின் கருத்தை நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு வக்கீல், ‘இந்த துயர சம்பவத்துக்கு காரணமான 8 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

பலியான பாவனா- யுவஸ்ரீ

மழைநீர் தேங்கியிருப்பது குறித்து ஏற்கனவே ஒரு பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) இந்த கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

‘மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மின்சார பெட்டி பராமரிப்பது, பலியான சிறுமிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு எவ்வளவு வழங்கப்பட்டது? சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து நாளை விளக்கம் அளிக்கவேண்டும்’.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
Tags:    

Similar News