செய்திகள்

ஜி.எஸ்.டி.யால் கருவாடு விலை உயர்வு - மீனவர்களுக்கு தொடர் பாதிப்பு

Published On 2017-11-02 06:59 GMT   |   Update On 2017-11-02 06:59 GMT
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட நிலையில் கருவாடு மீதான ஜி.எஸ்.டி. வரி அவர்களுக்கு சோதனையாக மாறியுள்ளது.
சென்னை:

மழை பெய்யாத சாதாரண நாட்களில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன் பிடித்து வந்து விற்பனை செய்வார்கள்.

பருவ மழை தீவிரமாக இருக்கும் நாட்களில் மீனவர் கள் கடலுக்குள் செல்வதில்லை. அத்தகைய நாட்களில் மீனவர்களுக்கு கை கொடுப்பது “கருவாடு விற்பனை” தான்.

மழை இல்லாத நாட்களில் விற்பனை போக மீதமாகும் மீன்களை அவர்கள் வெயிலில் காய வைத்து “கருவாடு” ஆக மாற்றி தயாராக வைத்துக் கொள்வார்கள். மழை சீசனில் அந்த கருவாடு விற்பனை அவர்களது வழக்கமான வருவாயை ஈடு செய்வதாக இருக்கும்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அறிமுகம் செய்யப்பட்டபோது கருவாடு மீது 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கருவாடு மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி.யை விலக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு அதை ஏற்கவில்லை.

இதன் காரணமாக தற்போது மழை சீசனில் கருவாடு விலை உயர்ந்துள்ளது. முன்பு வலை கருவாடு கிலோ 300 ரூபாய்க்கு விற்றது. தற்போது அது 315 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நெத்திலி கருவாடு விலை முன்பு கிலோ ரூ.350 ஆக இருந்தது. தற்போது 368 ரூபாயாக உயர்ந்துள்ளது. அது போல கிலிச்சா கருவாட்டின் விலை கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.210 ஆக அதிகரித்துள்ளது.

5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக வடசென்னையில் கருவாடு விற்பனை சரிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இத னால் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மீன் வலை மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் மீனவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப அடிக்கடி நைலான் மீன் வலைகளை மீனவர்கள் மாற்ற வேண்டியதுள்ளது.

முன்பு நைலான் மீன் வலை ரூ.260-க்கு விற்கப்பட்டது. தற்போது விலை ரூ.320 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வடசென்னை மீனவர்கள் கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வடசென்னை மீனவர்கள் கடந்த ஆண்டு வார்தா புயல் வீசியதில் இருந்தே தொடர் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். வார்தா புயல் பாதிப்புக்குப் பிறகு கடலில் கப்பலில் இருந்து எண்ணெய் கொட்டி பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு மீனவர்கள் 60 நாள் மீன்பிடி தடை காலத்தில் இருந்தனர்.

அது முடிந்ததும் படகுகளில் சீனா எந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினை எழுந்தது. அது ஓய்ந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை வந்து விட்டது. இப்படி வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட நிலையில் கருவாடு மீதான ஜி.எஸ்.டி. வரி மீனவர்களுக்கு சோதனையாக மாறியுள்ளது.

Tags:    

Similar News