செய்திகள்

புதுவையில் வாகன பதிவில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது: கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு

Published On 2017-11-02 10:26 IST   |   Update On 2017-11-02 10:26:00 IST
புதுவையில் வாகன பதிவில் மிகப்பெரிய மோசடி நடைபெறுகிறது என அம்மாநில கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:

நாட்டிலேயே காரை பதிவு செய்ய புதுவை மாநிலத்தில் மட்டுமே ஒரு சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.

புதுவையில் வரி குறைவாக இருப்பதால் அண்டை மாநிலங்களை சேர்ந்த திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் புதுவையில் காரை பதிவு செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு பல லட்சம் பணம் மீதமாகிறது.

நடிகை அமலாபால் ‘பென்ஸ் எஸ்’ ரக வெளிநாட்டு சொகுசு காரை ரூ.1 கோடியே 15 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த காரை புதுவையில் உள்ள ஒரு வீட்டு முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார்.

கேரளாவில் காரை பதிவு செய்தால் 20 சதவீதம் சாலை வரி செலுத்த வேண்டும். புதுவையில் என்றால் ஒரு சதவீத வரி மட்டுமே செலுத்தினால் போதும் என்பதற்காக புதுவை முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளனர்.

நடிகை அமலாபால் போலியான முகவரி கொடுத்து காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்ற புகார் எழுந்துள்ளது. இவரை போலவே கேரளா மாநில நடிகர்கள் பகத் பாசில், சுரேஷ்கோபி ஆகியோரும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் உயர் ரக கார்களை பதிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

புதுவையில் காரை பதிவு செய்ய வாடகை வீடு எடுத்த ஆவணங்கள், எல்.ஐ.சி. சான்று அந்த முகவரியில் எடுத்தது போன்று சமர்ப்பிக்கின்றனர். இதில் விதிமுறைகள் ஏதும் இல்லை. வரி நிர்ணயத்தை அந்தந்த அரசே முடிவு செய்யும் என்று புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.


ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் புதுவையில் ஆம்னி பஸ்களுக்கு பர்மிட் தரப்படுவதால் தங்களுடைய மாநிலத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் புதுவை கவர்னர் கிரண்பேடி கார் பதிவினால் நாட்டுக்கே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில் வெளி மாநில வி.ஐ.பி.களுக்கு குறைவான சாலை வரி விதிக்கலாமா? இது குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இந்த முறைகேடு வெளி மாநிலத்தவர் வாங்கும் ஆம்னி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கும் நடைபெறுகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டையில் அடிப்படையில் இந்த முறைகேடுகள் செய்யப்பட்டாலும் சுத்தமான நிர்வாகம் தேவை. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் தணிக்கைத்துறை விசே‌ஷமான ஆய்வை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளேன்.

முகவர்கள் தற்காலிக முகவரிகளை பாலிசி பெறுவதற்கு எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை எல்.ஐ.சி. நிறுவனம் தெரிவிக்க வேண்டும். இந்த முறைகேட்டில் எல்.ஐ.சி. முகவர்களும், வாகன விற்பனை டீலர்களும் இணைந்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எந்தெந்த நோட்டரி வழக்கறிஞர்கள் இந்த முகவரியை கொண்டு சான்று வழங்கியுள்ளனர் என்பதையும் கண்டறிய வேண்டும். சட்டத்துறை மூலம் பதிவு பெற்றுள்ள 80 நோட்டரி வழக்கறிஞர்களிடமும் சட்டத்துறை விசாரணை நடத்த வேண்டும்.

எல்.ஐ.சி. பாலிசி வழங்க தற்காலிக முகவரி வழங்க முதல் காரணமாக இருப்பவர் யார் என்றும் விசாரணை நடத்த வேண்டும். தவறான தகவல்களை வழங்கியிருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை ஊழல்களின் குகையாக உள்ளது. மருத்துவ இடங்களை நிரப்புவதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கவனம் செலுத்தியுள்ளது. கோபுர மின் விளக்குகள் அமைக்க நடைபெற இருந்த முறைகேடுகள் சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து அப்பணியை பொதுப்பணித்துறை ரத்து செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

எந்த தொழில்நுட்பத்தில் அனுமதியும் இன்றி படகுகள் வாங்கப்பட்டுள்ளன. தற்போது வெளிநாட்டு கார்களுக்கு செலுத்த வேண்டிய அதிகப்படியான சாலை வரியை தவிர்க்க புதுவை அரசு பாதுகாப்பு அளிப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.

Similar News