செய்திகள்

கொடைக்கானலில் பலத்த மழை: வேகமாக நிரம்பும் குடிநீர் தேக்க அணைகள்

Published On 2017-10-31 15:50 GMT   |   Update On 2017-10-31 15:50 GMT
கொடைக்கானலில் விடிய விடிய பெய்த மழையினால் குடிநீர்தேக்க அணைகள் நிரம்பி வருகின்றன.
திண்டுக்கல்:

தமிழகத்தில் மேல்அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சுற்றுலா நகரான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் குறைந்து கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது.

நேற்று பகல் பொழுதில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 7 மணிக்கு கன மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு விட்டு விட்டு இரவு 12 மணி வரை மழை பெய்தது.

மேலும் சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதனால் மக்கள் தங்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். மழையினால் பல இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் கரடிச்சோலை அருவியிலும் அதிக நீர்வரத்து காணப்பட்டது. பல புதிய அருவிகளும் மலைப் பகுதிகளில் உருவானது.

விடிய விடிய பெய்த மழையினால் மனோரத்தினம் சோலையில் உள்ள நகருக்கு குடிநீர் வழங்கும் கீழ்அணை, மேல்அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கொடைக்கானலில் நேற்று 31.8 மி.மீ. மழை அளவு பதிவானது.

பருவமழை தொடர்ந்து பெய்யும் நிலையில் இந்த அணைகள் விரைவில் நிரம்பும் என்று பொதுமக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் எப்போதும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு வடமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருவார்கள். ஆனால் தற்போது பனி மற்றும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது.

இதனால் அனைத்து விடுதிகள் மற்றும் லாட்ஜ்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா இடங்களும் பயணிகள் யாரும் இன்றி உள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News